டீசல் திருடி விட்டதாக கூறி டிரைவரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கொடூரம்: ராஜஸ்தானில் பயங்கரம்

3 hours ago 3

பில்வாரா: ராஜஸ்தானில் வாகனத்தில் டீசல் திருடி விட்டதாக கூறி டிரைவர் ஒருவரை ஜேசிபியில் தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பியாவர் நகரை சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவருக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை, அவரது டிரைவர் இயக்கி வந்தார். இந்நிலையில் அந்த டிரைவர் வாகனத்தில் இருந்து டீசல் திருடிவிட்டதாக கூறி, அவரை கயிற்றில் கட்டி ஜேசிபி வாகனத்தின் உயரத்தில் தலைகீழாக கட்டிவைத்து தொங்கவிட்டார்.

பின்னர், பெல்ட் மற்றும் கம்புகளால் அடித்ததுடன், அவரது காயங்களில் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றினார். இந்த கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் கோபம் எழுந்தது. பியாவர் காவல்துறை, இந்த சம்பவத்திற்கு காரணமான தேஜ்பால் சிங்கை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட டிரைவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாக்குதலால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம், ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதலை கண்டித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோட் அளித்த பேட்டியில், ‘மாஃபியாக்களின் ஆதிக்கத்தை மாநிலத்தில் கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார். கைது செய்யப்பட்ட தேஜ்பால் சிங் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

The post டீசல் திருடி விட்டதாக கூறி டிரைவரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கொடூரம்: ராஜஸ்தானில் பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article