தர்மபுரி, பிப்.10: மகேந்திரமங்கலம், மாரண்டஅள்ளி மற்றும் பாலக்கோடு பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை திருடிச் செல்லும் மர்ம கும்பலால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொம்மனூர், செல்லியம்மன் கோயில் அருகே, டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய பணிக்கும், கோயிலுக்கும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தவும் இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த டிரான்ஸ்பார்மரை திருடிய மர்ம நபர்கள், உள்ளே இருந்த ₹15 ஆயிரம் மதிப்பிலான ஆயிலை திருடிச் சென்றனர்.
மேலும், அதனுள்ளே இருந்த காப்பர் கம்பிகளை திருட முயன்றபோது, பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததை அறிந்த திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்த தகவலறிந்த மின்வாரிய உதவி பொறியாளர் திவாகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த மாதம் 29ம்தேதி தான், புதியதாக அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஒருவாரத்தில் திருடு நடந்திருப்பது மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல், மகேந்திரமங்கலம் சின்னகோடிகானூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில், காப்பர் கம்பி திருடப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு ₹70 ஆயிரமாகும். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. கடந்த 6 மாதத்தில் மட்டும், மகேந்திரமங்கலம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 7 டிரான்ஸ்பார்மர்கள் திருடு போயுள்ளது. இதுதவிர, மாரண்டஅள்ளி பகுதியில் 12 டிரான்ஸ்பார்மரும், பாலக்கோடு பகுதியில் 11 டிரான்ஸ்பார்மரும் திருடு போயுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 30 இடங்களில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் திருடு போனது. எனவே, திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் ரோந்து பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் அடிக்கடி டிரான்ஸ்பார்மரில் ஆயில், காப்பர் கம்பி திருடு போகிறது. இதனால், விவசாய பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு மின்விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘மகேந்திரமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களில், டிரான்ஸ்பார்மர்களில் திருடு போவது அடிக்கடி நடக்கிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து வருகிறோம். ஆனாலும், தொடர்ந்து திருட்டு நடக்கிறது. இதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும்,’ என்றனர்.
The post டிரான்ஸ்பார்மர்களில் ஆயில், காப்பர் கம்பிகள் திருடும் கும்பல் appeared first on Dinakaran.