
சென்னை,
'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
'டிராகன்' படம் உலக அளவில் சுமார் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும், நாளையும் வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) தொழில் வாழ்க்கைக்காக என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் காட்சிப்படுத்தியதற்காக இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், இப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் டிராகன் படத்திற்கான திரைகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.