
உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பயணிகள் கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின்போதே அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி மூழ்கிபோனது. அதில் பயணித்த 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த துயர சம்பவம் நடந்தது. அதனை மையப்படுத்தி 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'டைட்டானிக்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருப்பதால், நாளிதழ்களில் முதல் பக்கத்தில் டிரம்ப் புகைப்படம் இடம்பெறுவதால், தினமும் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை என்றும், அதனால் நியூஸிலாந்தில் நிரந்தரமாகத் தங்கவிருப்பதாகவும் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருக்கிறார். டொனால்ட் டிரம்ப்பால், அமெரிக்க அதிபர் பதவியே மோசமாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேமரூன், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, அது மிகவும் கொடூரமானது என்று பதிலளித்தார். "டொனால்ட் டிரம்ப் ஆட்சியில், அமெரிக்கா எப்படி மாறுகிறது என்ற கேள்விக்கு, ஒழுக்கமான எல்லாவற்றிலிருந்தும் அமெரிக்கா விலகுவதை நான் பார்க்கிறேன். அமெரிக்கா எதனுடனும் இணைந்திருக்கவில்லை என்றால் அது வரலாற்று ரீதியாக நிற்கமுடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும். நாள்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக படிக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன், அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது. ஆனால், நியூஸிலாந்து சென்றுவிட்டால், அங்கு வரும் நாளிதழ்களில் இந்த செய்திகள் மூன்றாம் பக்கத்தில்தான் வரும். எனவே, நாள்தோறும், செய்தித் தாள்களில் தினமும் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அது இங்கு தவிர்க்க முடியாதது, இது ஒரு கார் விபத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்றது" என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
நியூஸிலாந்து நாட்டில் உடனடியாக குடியுரிமை கேட்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடிபெயர்ந்து விடுவேன் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.