டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கா?

1 day ago 4

 

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் தன் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை அறிவித்தார். தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் கூடுதல் வரியை விதித்தார். இந்தியாவை "வரிகளின் ராஜா" என்று வர்ணித்த அவர், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அதே வரிதான் இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தான் பரஸ்பர வரி என்று அறிவித்த அவர், இதில் மிக வேகமாக இருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்று டிரம்புக்கு வாழ்த்து கூறி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் அவரது பேச்சின் தொனி மாறியது. மோடி எனது நண்பர் என்று கூறினாலும், வரி விஷயத்தில் மட்டும் கறாராக இருந்தார். ஏப்ரல் 2-ந்தேதி முதல் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று பிரகடனப்படுத்தினார். கடந்த நிதி ஆண்டில் இந்தியா, அமெரிக்காவுக்கு 77.51 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் கோடி) மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது.

ஆனால் அமெரிக்காவில் இருந்து 42.19 பில்லியன் டாலர் (ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி) அளவுக்குத்தான் பொருட்களை இறக்குமதி செய்தது. அதாவது, இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதிக்கும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ததற்கும் 35 பில்லியன் டாலர் (ரூ.3 லட்சம் கோடி) வித்தியாசம் இருந்தது. இதற்கு பரஸ்பர வரி முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இப்போது அமெரிக்காவில் இருந்து உதவி வர்த்தக பிரதிநிதியான பிரென்டன் லிஞ்ச் தலைமையிலான வர்த்தக குழு 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்த வேளையில், இந்தியா மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு தேவையான 35 மூலதன பொருட்களுக்கும், செல்போன் உற்பத்திக்கு தேவையான 28 பொருட்களுக்கும் இனி இறக்குமதி வரி இல்லையென்று அறிவித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 55 சதவீத பொருட்களுக்கு வரி குறைப்பு செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. இந்த பொருட்களுக்கு இப்போது 5 முதல் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு வரியை ரத்து செய்யவும் இந்தியா தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திடீரென்று அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் டிரம்ப் வரிவிதித்துள்ளார்.

இப்போது டிரம்ப் சில நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது சற்று மனநிறைவை தந்துள்ளது. ஆனாலும் டிரம்பின் பேச்சு நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஏப்ரல் 2-ந்தேதி முதல் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். ஆக பரஸ்பர வரியில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பாரா? என்பது அப்போதுதான் தெரியும்.

Read Entire Article