
சென்னை,
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம் பெற்றுள்ள 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் உள்ள வரிகள் வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை ஐகோட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.