சென்னை: மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய விசாரணை வழக்கில் டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி மிரட்டி, டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ.16.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கொளத்தூர், விவேகானந்தன் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜ்குமார், வ/37, த/பெ.தாமோதரன் என்பவர் சொந்தமாக ஆட்டொமொபைல் கடை நடத்தி வருகிறார். 16.04.2025 அன்று ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ‘‘நாங்கள் டெல்லி சைபர் கிரைம் தலைமையகத்திலிருந்து பேசுவதாகவும், உங்கள் மீது போதை பொருள் கடத்தல் மற்றும் ஆபாசமான வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பாக புகார் வந்திருப்பதாகவும், நீங்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறி உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும், விசாரணை முடித்து திரும்ப தருவதாகவும் மிரட்டியதன்பேரில், ராஜ்குமார், மேற்படி நபர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.16.5 இலட்சம் பணம் அனுப்பினார்.
பின்னர் விசாரித்தபோது, ராஜ்குமார் ஏமாற்றப்பட்டது தெரியவரவே, இது குறித்து 21.04.2025 அன்று மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், மேற்கு மண்டல இணை ஆணையாளர் P.C. கல்யாண், வழிகாட்டுதலின்பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, புகார்தாரரை டிஜிட்டல் தகவல்கள் மூலம் அச்சுறுத்தி பணத்தை பெற்று ஏமாற்றிய நபரின் விவரங்களை சேகரித்தும் பாதிக்கப்பட்ட நபரின் பணம் செலுத்தி வங்கியில் எடுக்கப்பட்ட காசோலை விவரங்கள் பெற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய ஆனந்தகுமார், வ/43, த/பெ.ஜெயபால், அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சிபுரம், சிதம்பரம் நகர், தூத்துக்குடி மாவட்டம் என்பவரை நேற்று (06.05.2025) கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி ஆனந்தகுமார் என்பவர் மேற்கண்ட சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்காக டிஜிட்டல் கைது என்று அச்சுறுத்தி ஏமாற்றி பாதிக்கப்படுவோரிடமிருந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பெறப்படும் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து பயனடைவதற்கு பொதுமக்களிடம் வங்கி கணக்கு துவக்குவதாக விவரங்கள் பெற்று, வங்கி கணக்கு தொடர்புடைய காசோலை மற்றும் ஏடிஎம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் சிம்கார்டுகள் தானே வைத்துக் கொண்டு, சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு விவரங்கள் வழங்கி அதற்குரிய கமிஷன் தொகையாக 25 வங்கி கணக்குகளை வைத்து குற்றவாளிகளுடன் இணைந்து செயல்பட்டது தெரியவந்தது. இவ்வாறு எதிரி ஆனந்தகுமார் 25 வங்கி கணக்குகளை தொடங்கி ஏமாற்றப்பட்ட நபர்களின் பணம் சுமார் ரூ.60 லட்சத்தை வங்கியிலிருந்து போலியாக காசோலைகளை கையொப்பமிட்டு சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை ஒப்படைத்து கமிஷன் தொகை தலா 3 சதவீதம் பெற்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி ஆனந்தகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.
The post டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி ரூ.16.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது appeared first on Dinakaran.