மும்பை: ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் ஆசிரியையிடம் ரூ.5.5 கோடி மோசடி செய்த மும்பையை சேர்ந்த 3 குற்றவாளிகளை ேபாலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசினார். அப்போது, எதிர்முனையில் போலீஸ் சீருடையில் தோன்றிய 2 பேர், தங்களை மும்பை சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆசிரியையிடம், ‘உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோதமாக அதிகளவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்யப்போகிறோம்’ என மிரட்டி உள்ளனர். மேலும், ‘இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பணத்தை உடனடியாக எங்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்த ஆசிரியை, தனது நிரந்தர வைப்பு தொகையில் இருந்த ரூ.5 கோடியே 26 லட்சம் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.21 லட்சத்தை எடுத்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இவ்விவகாரத்தை தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை, மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் ஆசிரியையை மிரட்டி பணம் பறித்தது மும்பையை சேர்ந்த சபீர் அன்சாரி (39) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
The post ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.5.5 கோடி மோசடி: மும்பையில் 3 குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.