![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37156611-5.webp)
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் விடாமுயற்சி படத்திற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு விடமுயற்சி திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே முதல் நாளில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல்லாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்தின் திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முன்பதிவு மூலம் மட்டும் இப்படம் ரூ.2.69 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இப்படம் பிரீ புக்கிங் மூலம் ரூ.3.5 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறதாம். இன்னும் நான்கு நாட்கள் எஞ்சி உள்ளதால், இப்படம் முன்பதிவிலேயே ரூ.25 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் முந்தைய படங்களை விட "விடாமுயற்சி" திரைப்படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.