
வதோதரா,
5 அணிகள் இடையிலான 3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 80 ரன்னும், ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் சதர்லேண்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 43 ரன் எடுத்தார்.
இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுட் இந்த ஆட்டத்தில் 42 ரன் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் (8,005 ரன்) படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 8,349 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிஸ் (5,826 ரன்) 3வது இடத்திலும், ஷபாலி வர்மா (4,542 ரன்) 4வது இடத்திலும், மிதாலி ராஜ் (4,349 ரன்) 5வது இடத்திலும் உள்ளனர்.