டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

3 months ago 20

பெரம்பூர்: டாஸ்மாக் கடையில் தனது செல்போனை திருடியரை, உணவு டெலிவரி ஊழியர் பொறிவைத்து பிடித்து, போலீசில் ஒப்படைத்தார். அயனாவரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் லூர்து நாதன் ஜோசப் (34). உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி இரவு அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் இவரது ரூ.26,000 மதிப்புள்ள செல்போனை அபேஸ் செய்து தப்பினார்.

அதன்பிறகு கடையில் இருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த நபரை ஜோசப் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர், தினமும் அதே மதுபான கடைக்குச் சென்று குறிப்பிட்ட அந்த நபர் மது வாங்க வருகிறாரா என ஜோசப் நோட்டமிட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மதுபான கடைக்கு குறிப்பிட்டு அந்த நபர் மற்றும் அவரது நண்பர் என 2 பேர் மது வாங்க வந்தனர்.

இதனைக் கண்ட ஜோசப், அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்றொருவர் ஓடிவிட்டார். பின்னர் அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பரணிநாதன் சம்பவ இடத்திற்குச் சென்று பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.

விசாரணையில், அவர் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்த சூர்யா (24) என்பதும், இவர் பாரிஸ் பகுதியில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இவர்தான் ஜோசப்பின் செல்போனை திருடியது என்பது உறுதியானது. இதனையடுத்து சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  தப்பிய அவரது நண்பரான வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article