டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

3 months ago 21

விருத்தாசலம், அக். 1: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் விற்பனையாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு கலெக்‌ஷன் பணத்தை கடை லாக்கரில் வைத்துவிட்டு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதியினர் சசிகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த சசிகுமார் கடையில் உள்ள இரண்டு ஷட்டர்களில் இருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது 26 குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய மதுபாட்டில் பெட்டி ஒன்று காணாமல் போயிருந்தது. பின்பு வெளியே வந்து பார்த்தபோது கடையில் வெளிப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் காலி பெட்டி மட்டும் கிடந்தது.

தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற டிஎஸ்பி கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சிறப்பு உதவியாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பணம் இருந்த லாக்கர் திறக்கப்படாமல் இருந்ததால் பணம் தப்பித்தது என நினைத்து மற்ற விசாரணையை நடத்திக்கொண்டு இருந்தனர். பின்பு கடலூரில் இருந்து தடயவியல் டிஎஸ்பி தர் தலைமையிலான நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது லாக்கரை திறந்து பார்த்தபோது அந்த லாக்கரில் இருந்த ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வங்கியில் செலுத்தாமல் லாக்கரில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் காணாமல்போய் உள்ளதாக கடை ஊழியர் தெரிவித்தார். இதில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் கையில் கையுறை அணிந்தும், இரண்டு ஷட்டர்களின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மதுபாட்டில் காலிபெட்டியை கவிழ்த்து மூடியதும் தெரியவந்தது. இதனால் கண்காணிப்பு கேமராவில் எந்த தடயமும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் கொள்ளைபோன சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Read Entire Article