![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39195261-untitled-1.webp)
சென்னை,
தமிழகத்தில் மது விற்பனையால் கிடைக்கும் கலால் வரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் நிறுவனம் பெரியளவில் லாபம் இல்லாமல் நிதி தட்டுப்பாட்டால் தடுமாறி வருகிறது. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், சம்பளம் உயர்வு போன்றவை நிறைவேறாமல் உள்ளது. அதனால் ஊழியர்கள், நேற்று முன்தினம் போராட்டத்திலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளில், பாட்டிலுக்கு ரூ.10 முதல் தரத்திற்கு ஏற்ப ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டாஸ்மாக் நிறுவனம் பில் போட்டு மது விற்பனை செய்யவும், யுபிஐ மற்றும் கிரெடிட்-டெபிட் கார்டு மூலம் பணம் பெறவும் முடிவு செய்தது. அதற்கான சோதனை முயற்சி நடந்து, இப்போது தமிழகத்தில் மொத்தமுள்ள 4,777 மதுக்கடைகளில் 1,852 கடைகளில் பில் போட்டு மது விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி அரக்கோணம், சென்னை மத்தி, சென்னை வடக்கு, கடலூர், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருப்பூர், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளுர் மேற்கு, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள கடைகளில் பில் போட்டு மது விற்பனை செய்யப்பட உள்ளது.
செல்போன் வடிவில் உள்ள இந்த பில் எந்திரம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்தால் ஒன்று என்ற எண்ணிக்கையில் கடைகளுக்கு பிரித்து தரப்படுகிறது. அதாவது ஒரு கடையில் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்தால் 2 எண்ணிக்கையில் தரப்படும். கூடுதல் கட்டணம் வாங்க கூடாது என்ற அரசின் நோக்கம், இந்த பில் எந்திரம் மூலம் நிறைவேறுமா என்பது போகபோகத்தான் தெரியும்.