டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த தமிழ்நாடு அரசு மனு மீது உயர் நீதிமன்றத்தில் இறுதி வாதம்

1 week ago 4

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத்துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி ஆஜராகி வாதிட்டார். அமலாக்கத்துறையின் சோதனையின் போது பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து 60 மணி நேரம் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஒரு சிலர் மட்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவறு நடந்துள்ளது என்று நம்புவதற்கான காரணங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அதுபோன்று நம்புவதற்கு எதுவும் இல்லை. தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய செல்போனை பறிமுதல் செய்வது அந்தரங்க உரிமைக்கு எதிரானது. அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் அத்துமீறும் போது நீதிமன்றம் தலையிடலாம் என்று வாதிட்டார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கை முதலில் விசாரித்த அமர்வு இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு இப்போதும் அமலில் இருக்கிறதா என்று கேட்டார். இதற்கு, இந்த அமர்வு அதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக இருப்பதை மட்டும் இந்த நீதிமன்றம் பின்பற்றும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்வகேட் ஜெனரல், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது.

அதனடிப்படையிலேயே வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றக்கூடாது என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் நாளையும் (இன்று) வாதம் தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில், ‘‘டாஸ்மாக் நிர்வாகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது உட்பட அதுசார்ந்த வழக்குகளை முதலில் ஐகோர்ட் விசாரித்து முடிவெடுக்கட்டும். அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவை அடிப்படையாக கொண்டு வேண்டுமானால் உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும். இதில் தற்போது நாங்கள் தலையிட விரும்பவில்லை’’ என்று தெரிவித்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த தமிழ்நாடு அரசு மனு மீது உயர் நீதிமன்றத்தில் இறுதி வாதம் appeared first on Dinakaran.

Read Entire Article