
புதுடெல்லி,
பழம்பெரும் இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். டாடா அறக்கட்டளையின் தலைவராக பதவி வகித்து வந்த ரத்தன் டாடா மறைவை தொடர்ந்து, அதன் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரத்தன் டாடாவின் சகோதரர் உறவுமுறையை கொண்ட நோயல் டாடா, டாடா டிரன்ட்டின் தலைவராகவும், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் தொராப்ஜி டாடா அறக்கட்டளை என வேறு இரு அறக்கட்டளைகளின் வாரியத்தின் காப்பாளராகவும் நோயல் டாடா பதவி வகித்து வருகிறார்.
ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகளும் இல்லை என்ற சூழலில், அவருக்கு அடுத்து தலைவராக யார் வருவது என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்படி, டாடா அறக்கட்டளையின் வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நோயல் டாடாவை அடுத்த தலைவராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
டாடா சன்ஸ் தனியார் நிறுவனத்தின் 66 சதவீதம், டாடா அறக்கட்டளையின் வசம் உள்ளது. அதனால், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. 1892-ம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடாவால் அமைக்கப்பட்ட டாடா அறக்கட்டளையானது, கல்வி, சுகாதார நலம் மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது.