பூந்தமல்லி: சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா, வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவமனை வளாகத்தில் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகர் அர்ஜூன், ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சீனிவாச மூர்த்தி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், தேசத்தின் வளர்ச்சி 2047 என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 100வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது இந்தியா மிக பெரிய நாடாக வளர்ந்து இருக்கும். பொருளாதார வளர்ச்சியில் 2014ம் ஆண்டு நாடு 11வது இடத்தில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து தற்போது இங்கிலாந்தை பின் தள்ளி விட்டு 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வந்துள்ளது. இதன் மூலம் வேலை கொடுப்பவர்களாக இளைஞர்கள் ஆக வேண்டும் என மோடி புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்தார். அதன் நோக்கம் என்னவென்றால் இளைஞர்கள் நாட்டை முன்னெடுத்து செல்லும் அங்கமாக இருக்க வேண்டும். ரஷ்யா, உக்ரைன் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது பிரதமர் மோடி இரு நாட்டு தலைவர்களிடமும் பேசி போரை நிறுத்தி 23 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்களை அங்கிருந்து அழைத்து வந்தார். இந்தியாவில் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஹாலிவுட் படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் இங்கு நடக்கிறது. புதிய பாரதத்தை உருவாக்குவோம். மேலும், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கவனம் செலுத்த வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண் குமார், செயலாளர் எ.ரவிகுமார், துணை வேந்தர் கீதாலட்சுமி, முதன்மை கல்வியாளர் கோபாலகிருஷ்ணன், முகவர் விஸ்வநாதன், இணை, துணை வேந்தர்கள் ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், நிர்வாக அதிகாரிகள் கோதண்டன், வாசுதேவன், தனவேல், ஞானசேகரன், பதிவாளர் பழனிவேலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு appeared first on Dinakaran.