நன்றி குங்குமம் தோழி
மு டி உதிர்வு பிரச்னை உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ெதரிந்து கொள்ளலாம்.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தலை முடி உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். ஆனால் இயற்கையான முறையில் தலைமுடிக்கு முடி உதிர்தல் உள்ளிட்ட எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆலிவ் ஆயில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
ஆம், பல நூற்றாண்டுகளாகவே ஆலிவ் ஆயில் அழகு மற்றும் ஆரோக்கிய நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அது தலைமுடி பராமரிப்புக்கும் உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் ஏ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவை அனைத்தும் முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் முடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
ஆலிவ் எண்ணெய் முடியை நீரேற்றமாக்கி மென்மையாக வைக்க உதவும். மேலும் இயற்கையான பளபளப்பை கொடுக்கும். தலைமுடியின் முனையில் பிளவு ஏற்படாமல் தடுக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, நல்ல முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். சூரிய வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும்.
ஆலிவ் எண்ணெய் மசாஜ்…
*சிறிதளவு ஆலிவ் எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் இருக்கும் போது உச்சம் தலையிலும் முடியிலும் நன்றாக தடவி, பிறகு துண்டு அல்லது ஷவர் கேப்பால் தலைமுடியை மூடி சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு வழக்கம் போல ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
*இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து அதை உங்களது தலைமுடியில் நன்றாக தடவி, பிறகு சூடான நீரில் ஷாம்பு போட்டு குளிக்கவும்.
*ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் ஒரு பாதியில் இருந்து சாற்றை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனுடன் ரெண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது தலைமுடிக்கு தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து சூடான நீரில் ஷாம்பு போட்டு குளிக்கவும்.
*ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, சிறிது சூடாக்கி பிறகு அதை உங்களது உச்சந்தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கவும்.
தொகுப்பு: பி.கவிதா, சிதம்பரம்.
The post டல்லடிக்கும் கூந்தலை டாலடிக்கச் செய்யலாம்! appeared first on Dinakaran.