டங்ஸ்டன் திட்டம் ரத்து: மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 hours ago 1

சென்னை,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் முதல்-அமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது!

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் துணைபோகக் கூடாது!" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article