சென்னை,
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு டெண்டர் விடுத்தது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
"மத்திய அரசால் 24.06.2024-ல் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை எனவும், அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.