டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

11 hours ago 1

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதிகளில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்க குறிப்பு திமுக அரசின் இரட்டை வேட முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு கோரிய அனைத்து விவரங்களையும் வழங்கி, அந்த சுரங்கம் அமைய அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருந்துவிட்டு மக்கள் எதிர்ப்புக்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய கபடநாடகமும் பொதுமக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏல அறிவிப்பு வெளியானது முதல் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ஏலம் முடிவுக்கு வரும் வரை சுமார் பத்து மாத காலம் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, மக்களின் தொடர் போராட்டத்திற்கு பின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதும், பதவியை விட்டு விலகுவேன் என முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

அதே நேரத்தில், பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் சுரங்கத்துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், இத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டால் மட்டுமே மேலூர் தாலுக்காவில் உள்ள தொல்லியல் சின்னங்களும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தமிழர்களின் பண்டைய கால வரலாற்றையும் அழிக்கும் வகையிலான டங்ஸ்டன் திட்டத்திற்கான அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், மக்கள் விரும்பாத இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பிள்ளையார்சுழி போட்டு மாபெரும் துரோகம் இழைத்த திமுக அரசும், மு.க.ஸ்டாலின் அவர்களும் மதுரை மாவட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article