அரியானா: போதை பொருள் கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவன் கொடூர கொலை

12 hours ago 2

பரீதாபாத்,

அரியானாவின் பரீதாபாத் நகரில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அன்ஷுல். இவர் நேற்று முன்தினம் சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது ஹிமான்ஷு மாத்தூர் மற்றும் ரோகித் தமா ஆகியோர் கூட்டாளிகளுடன் வந்து ஆயுதங்களால் அன்ஷுலை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய சகோதரி அஞ்சலி மற்றும் உடனிருந்தவர்கள் உடனடியாக அன்ஷுலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். 14 முறை கத்தியால் குத்தியதில் அவர் சரிந்து விழுந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அன்ஷுலின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் பற்றி போலீசாரிடம் கூறியபோது, அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, புகாரளிக்கும்போது போலீசார் சிரித்து மகிழ்ந்தனர் என குற்றச்சாட்டாக கூறினர்.

இதுபற்றி அன்ஷுலின் நண்பர் அன்மோல் கூறும்போது, குற்றவாளிகள் பஸ்லேவா காலனி பகுதியில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதுடன் போதை பொருட்களை விற்கும் வழக்கம் கொண்டவர்கள். அந்த பகுதி பெண்கள், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்வதும் வழக்கம் என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் அன்ஷுல், அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பழி வாங்கவே இந்த சம்பவம் நடந்துள்ளது என அன்மோல் போலீசாரிடம் கூறியுள்ளார். அஞ்சலி அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article