டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து அரிட்டாபட்டி கிராம மக்கள் மலை மீது ஏறி போராட்டம்

4 weeks ago 6

மேலூர்: மேலூர் அருகே நேற்று இரவு கூடிய அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை, மலை மீது அமர்ந்து தொடர் போராட்டத்தை திடீரென தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டியில் வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அரிட்டாபட்டியில் கூடிய கிராம மக்கள், அருகில் உள்ள மற்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுடன் இணைந்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதன் முடிவில், தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மலை மீது அமர்ந்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதன்படி முதற்கட்டமாக பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தங்கள் போராட்டத்தை நேற்றிரவு மலை மீது ஏறி அமர்ந்து நடத்தினர். இப்போராட்டம், சுரங்கத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் வரை தொடரும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.

The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து அரிட்டாபட்டி கிராம மக்கள் மலை மீது ஏறி போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article