ஜெர்மனி முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் காலமானார்

2 hours ago 1

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர்க்கு வயது 81.

ஹோர்ஸ்ட் கோஹ்லர் ஜெர்மனியின் அதிபராக 2004 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2010-ம் ஆண்டு மே 31-ந்தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஜெர்மன் ராணுவத்தினரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதால் கோஹ்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. அந்த பேட்டியில், "ஜெர்மனியின் ஏற்றுமதி வர்த்தகத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில் ஜெர்மனியின் ராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நமது நாட்டின் நலன்களை பாதுகாக்க முடியும்" என்று கோஹ்லர் கூறியிருந்தார்.

இதனால், ஆப்கானிஸ்தானில் ஜெர்மனி தனது ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ள இருப்பதாக பலர் விமர்சித்தனர். ஆனால், சோமாலியா கடற்கரை பகுதிகளை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான ரோந்து பணி குறித்துதான் கோஹ்லர் பேசினார் என்று அவரது ஆதரவாளர்கள் விளக்கமளித்திருந்தனர்.

வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, ஆப்பிரிக்க மக்களின் தேவைகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்க முயன்றதற்காக கோஹ்லர் பாராட்டைப் பெற்றார். இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, "யூத படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பு நான் வெட்கத்துடனும், பணிவுடனும் தலை வணங்குகிறேன்" என்று கோஹ்லர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article