
டெல்லி,
1991 முதல் 1996 வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா செயல்பட்டார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, சொத்துக்குவிப்பு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதேவேளை, சிபிஐ சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ தீபா, தீபக் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ஜெயலலிதா 2016ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் நகைகள், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படியும், கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தீபா, தீபக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், தீபா, தீபக் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், சொத்து ஆவணங்கள், வெள்ளி பொருட்களை உள்பட அனைத்து பொருட்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. ஜெயலலிதாவின் தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்கள் உள்பட அனைத்தும் இன்று இரவு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.