
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் 'பிரதர்' திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது.
சமீபத்தில் தனக்கு திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் இருப்பதாக ஜெயம் ரவி முன்பு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 'கோமாளி' படத்தில் ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், ஜெயம் ரவி தனது 34-வது படமான "ஜெ.ஆர் 34" என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் யோகி பாபுவை வைத்து, அந்த புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயம் ரவி எதிர்கொண்ட சவால்களை ஒரு நகைச்சுவையான பேமிலி என்டர்டெயினர் படமாக இந்த படத்தில் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.