ஜெனீவா: அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப், நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார். அதன்ஒரு பகுதியாக அமெரிக்க பொருள்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதிகளவு வரியை குறைப்பதற்கான ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதன்படி உலகின் எந்தெந்த நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கிறதோ அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
அந்த வகையில் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவீத வரியை சீனா விதித்தது. உலகின் மிகப்பெரிய நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் அதிக வரிகளை விதித்ததால் இருநாடுகளிடையேயான வர்த்தகப்போர் உச்சத்தை எட்டியதுடன், உலக பொருளாதாரமும் சீர்குலைந்தது. இந்நிலையில் சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பர வரி விதிப்பை குறைத்துள்ளன.
இதுதொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐநாவுக்கான ஸ்விட்சர்லாந்து தூதரகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீனா பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த 145 சதவீத பரஸ்பர வரியை 30 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒத்து கொண்டது. அதேபோல் சீனா அமெரிக்க பொருள்களுக்கு விதித்த 125 சதவீத வரியை 10 சதவீதமாக குறைத்துள்ளது.
The post ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு; பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல் appeared first on Dinakaran.