ஜெக்ஜித்தின் உடல்நிலை மோசமான நிலையில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டம்

5 hours ago 3

புதுடெல்லி: உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெக்ஜித்தின் உடல்நிலை மோசமான நிலையில் வருகிற குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். வருகிற 26ம் தேதி அன்று குடியரசு தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று நடைபெறும் முதல் குடியரசு விழா என்பதால் சர்வதேச தலைவர்கள் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனும் விவசாயிகளுக்கான அமைப்பு நாடு முழுவதும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ஒன்றிய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்படாத நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இதற்கிடையே விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி 48 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெக்ஜித் சிங் தால்லேவாலின் உடல்நிலை குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், விவசாயிகள் அமைப்பினர் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவ. 26ம் தேதி முதல் பஞ்சாப் மற்றும் அரியானா இடையேயான கானவுரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெக்ஜித் சிங் தால்லேவால் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜெக்ஜித்தின் உடல்நிலை மோசமான நிலையில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article