வேலூர், ஜன.14: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளான இன்று உழவுக்கு கைகொடுக்கும் இயற்கையை வணங்கும் வகையில், செங்கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை சூரியனுக்கு படையலிட்டு, புது பானையில் பச்சரிசி பொங்கலிட்டு வழிபடும் நிகழ்வு வீடுகள் தோறும் நடைபெறுகிறது. அதற்கு முதல் நாளான நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, வேலூர் மாவட்டம் முழுவதும் நகரம், கிராமங்களில் வீடுகளில் இருந்த பழைய பாய்கள் மற்றும் பழைய துணிகள் போன்ற பயனற்ற பொருட்களை நேற்று அதிகாலையிலேயே தெருவில் தீயிட்டு கொளுத்தினர். இவ்வாறு பழைய பொருட்களை எரித்தபோது சிறுவர்களும், சிறுமிகளும் உற்சாகமாக கைகளை தட்டியும், டப்பா, தட்டு போன்றவற்றை தட்டி ஒலியெழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போகி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பழைய பொருட்களை கொளுத்த வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும், எரிக்கப்பட்ட பொருட்களில் பழைய டயர்களும், பிளாஸ்டிக் பாய்கள் போன்றவையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post போகி பண்டிகையை கொண்டாடிய மக்கள் பழைய பொருட்களை எரித்து appeared first on Dinakaran.