துபாய்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை தேர்வு செய்து இந்த தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த அணியில் 4 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கைலா ரெய்னெக் கேப்டனாகவும், இங்கிலாந்தின் கேட்டி ஜோன்ஸ் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் 12வது வீராங்கனையாக தென் ஆப்பிரிக்காவின் ந்தாபிசெங் நினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. தேர்வு செய்த சிறந்த அணி விவரம்: கொங்காடி திரிஷா (இந்தியா), ஜெம்மா போத்தா (தென் ஆப்பிரிக்கா), டேவினா பெரின் (இங்கிலாந்து), ஜி கமலினி (இந்தியா), கைம்ஹே ப்ரே (ஆஸ்திரேலியா), பூஜா மஹதோ (நேபாளம்), கைலா ரெய்னெக் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), கேட்டி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), ஆயுஷி சுக்லா (இந்தியா), சாமோதி பிரபோதா (இலங்கை), வைஷ்ணவி சர்மா (இந்தியா).
12வது வீராங்கனை: ந்தாபிசெங் நினி (தென் ஆப்பிரிக்கா).