கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்று உலகக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றி உள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 19 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வந்தன. இதில் அபாரமாக ஆடிய நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த அணிகள் இடையே கோலாலம்பூரில் இறுதிப் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஜெம்மா போதா 16 ரன்னிலும், சைமோன் லோரன்ஸ் பூஜ்யத்திலும் வீழ்ந்து மோசமான துவக்கத்தை தந்தனர். அதன் பின் வந்த வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், 20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி, 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் 4 வீராங்கனைகள் பூஜ்யத்தில் வீழ்ந்தனர்.
இந்திய பந்து வீச்சாளர்களில் கொங்காடி திரிஷா 3, வைஷ்ணவி சர்மா, பருனிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்த 83 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீராங்கனைகளில் ஒருவரான தமிழகத்தின் கமாலினி 8 ரன்களில் அவுட்டானார். அதன் பின் மற்றொரு துவக்க வீராங்கனை கொங்காடி திரிஷா, சனிகா சால்கேவுடன் சேர்ந்து தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை சிதறடித்தனர். 11.2 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொங்காடி திரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ரன் குவித்தார். சனிகா 22 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன் எடுத்து வெற்றிக்கு உதவியாக இருந்தார். 44 ரன் எடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய கொங்காடி திரிஷா ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி. இந்த வெற்றியை அடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ள இந்திய அணிக்கு உலகக் கோப்பை பரிசளிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் நடந்த ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்று இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
The post ஜூனியர் மகளிர் டி20 இறுதியில் இந்தியா மீண்டும் சாம்பியன்: உலக கோப்பையை வென்றது appeared first on Dinakaran.