ஜூனியர் மகளிர் உலக கோப்பை இதுதாண்டா இந்தியா! 26 பந்தில் வெஸ்ட் இண்டீஸ் காலி

2 hours ago 2

கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 2வது ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் பங்கேற்பர். நேற்று நடந்த போட்டி ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியுடன் நடப்பு சம்பியனான இந்திய மகளிர் அணி மோதியது.

இந்திய வீராங்கனைகளின் அனல் பறக்கும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் சடசடவென சரியத் துவங்கினர். 13.2 ஓவர்களை மட்டுமே சந்தித்த அவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன் எடுத்தனர். அதிகபட்சமாக அஸாபி கலெண்டர் 12, கெனிகா காஸர் 15 ரன் எடுத்தனர். இந்தியாவை சேர்ந்த பருணிகா சிசோடியா 3, ஆயுஷி சுக்லா, ஜோசிதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர், 45 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர்.

துவக்க வீராங்கனை கொங்காடி திரிஷா 4 ரன்னில் அவுட்டானார் மற்றொரு துவக்க வீராங்கனையும் தமிழகத்தை சேர்ந்தவருமான கமாலினி 13 பந்தில் 16, சனிகா சால்கே 11 பந்தில் 18 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதனால், 4.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெறும் 26 பந்துகளை மட்டுமே சந்தித்து, 94 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 5 ரன் மட்டுமே தந்து 2 விக்கெட் வீழ்த்திய ஜோசிதா ஆட்ட நாயகி.

The post ஜூனியர் மகளிர் உலக கோப்பை இதுதாண்டா இந்தியா! 26 பந்தில் வெஸ்ட் இண்டீஸ் காலி appeared first on Dinakaran.

Read Entire Article