ஜூனியர் டாக்டர்கள் இன்று 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம்

1 month ago 8

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்நிலையில், வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் சீல்டா கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில், இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஜூனியர் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் ஜூனியர் டாக்டர்களில் ஒருவரான டாக்டர் சவுமோதீப் ராய் கூறும்போது, 2 நாட்களாக எங்களுடைய கல்லூரியை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரத போராட்டம் தொடரும்.

இன்று மாலை பேரணி ஒன்று நடைபெறும். வடக்கு வங்காள மருத்துவ கல்லூரியில், ஜூனியர் டாக்டர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்தவர்கள் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை பற்றி குறிப்பிட்ட அவர், அந்த குற்றப்பத்திரிகையில் உள்ள விவரங்கள் என்ன? என்று நாங்கள் பார்க்க வேண்டும். ஆனால், இந்த சம்பவத்திற்கான உள்நோக்கம் தெளிவாக தெரியும்வரை, எத்தனை நபர்கள் இதனுடன் முழுவதும் தொடர்பில் உள்ளனர் மற்றும் எவ்வளவு சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன போன்ற அனைத்தும் வெளிவர வேண்டும் என தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம் என்றார். இவை எல்லாம் தெரிய வரும்வரை எங்களை திருப்திப்படுத்த முடியாது. எங்களுடைய போராட்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

Read Entire Article