ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

3 months ago 18

நன்றி குங்குமம் டாக்டர்

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர். இவர், தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பதுடன் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் RRR என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளார். இவரது முதல் படமான பால ராமாயணம் முதல் சமீபத்தில் கொரடாலா சிவா இயக்கத்தில் வெளியான தேவரா – 1 வரை தனது நடிப்புத் திறமை, வசீகரமான ஆளுமை மற்றும் பொருத்தமான உடலமைப்பிற்காக அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறார். அடுத்து அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் படமான போர் 2 மற்றும் தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்டிஆர் 31 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது ஃபிட்னெஸ்காக அதிக கவனம், நேரம் செலவிடும் நடிகர்களில் இவரும் ஒருவர். அவரது ஓர்க்கவுட் மற்றும் உணவுத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஒர்க்கவுட் திட்டம்

நான் ஒரு ஃபிட்னெஸ் விரும்பி. எனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாகவும், கவனமாகவும் இருப்பேன். எனவே, உடலமைப்பைப் பராமரிக்க கடுமையான உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்கிறேன். அது கார்டியோ, வலிமை பயிற்சி மற்றும் செயல்பாட்டு பயிற்சி ஆகியவற்றின் கலவையாக இருக்கும். உடலை வருத்திக் கொண்டு இவ்வளவு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா என்று என் நண்பர்கள் பலரும் கேட்கிறார்கள். நான் சொல்வது என்னவென்றால்.

ஆங்கிலத்தில் No pain No gain என ஒரு பழமொழி இருக்கிறது. வலியில்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. தொடர்ந்து ரசிகர்களின் மனதில் நமக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான உழைப்பை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். நடிகன் என்று இல்லை பொதுவாகவே எனக்கு ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். அதனால் எனக்காக நான் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.

அந்தவகையில், 30 நிமிட கார்டியோ அமர்வுடன் எனது வொர்க்அவுட்டைத் தொடங்குகிறேன். இது எனது இதயத் துடிப்பை அதிகரிக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர, டிரெட்மில்லில் ஓடுவது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளையும் செய்து வருகிறேன். கார்டியோவுக்குப் பிறகு, வலிமை பயிற்சியில் கவனம் செலுத்துவேன். அவை தசையை வளர்க்கவும் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனுடன் குந்துகைகள், டெட்லிஃப்ட்ஸ், பெஞ்ச் பிரஸ் மற்றும் புல்-அப்கள் போன்ற கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன்.

அடுத்ததாக செயல்பாட்டு பயிற்சிகள். இது எனது சுறுசுறுப்பு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பர்பீஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ் மற்றும் போர் கயிறுகள் போன்ற பயிற்சிகளையும் செய்கிறேன். இதைத்தவிர, விளையாட்டுகளிலும் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே, கிரிக்கெட் விளையாடுவதும், பார்ப்பதும் மிகவும் பிடிக்கும். அதுபோன்று கல்லூரி நாட்களில் பேட்மின்டன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பொதுவாக, நடிகர்கள்தான் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அனைவருமே தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் ஃபிட்டாக இருந்தாலே அவரது தன்னம்பிக்கை அதிகமாகும்.

உணவுத் திட்டம்

ஃபிட்னெஸில் எவ்வளவு கவனம் செலுத்துகிறேனோ அந்தளவு உணவு முறையையும் பின்பற்றி வருகிறேன். அந்த வகையில் எனது உடலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்துக்களை வழங்கவும், எனது உடலமைப்பைப் பராமரிக்கவும் கடுமையான உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறேன். அதில், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உள்ளடக்கிய சீரான உணவை உண்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

காலை உணவு: முட்டை, ஓட்ஸ் மற்றும் பழங்களை உள்ளடக்கிய புரதச்சத்து நிறைந்த காலை உணவோடு எனது நாளைத் தொடங்குகிறேன்.

மதிய உணவு: மதிய உணவிற்கு, அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சி அல்லது மீன் ஆகியவற்றின் கலவையை எடுத்துக் கொள்வேன்.

இரவு உணவு: இரவில் எளிமையான உணவையே எடுத்துக் கொள்வேன். அவற்றில் சாலட்டுடன் வறுக்கப்பட்ட மீன் அல்லது கோழி இறைச்சி இருக்கும்.

தின்பண்டங்கள்: பொதுவாக திண்பண்டங்களில் பழங்கள் மற்றும் புரோட்டீன் பார்களை சாப்பிடுவேன். அவை, நாள் முழுவதுக்குமான எனது ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இவை அனைத்தும்தான் நான் பின்பற்றும் எனது ஃபிட்னெஸுக்கான ரகசியங்கள்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article