ஜூனியர் ஆசிய கோப்பை அரை இறுதியில் சுருண்டது இலங்கை நிமிர்ந்தது இந்தியா: 7 விக்கெட் வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி

1 month ago 5

சார்ஜா: ஜூனியர் ஆசிய கோப்பைக்காக சார்ஜாவில் நேற்று நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அரை இறுதி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை 173 ரன்னுக்கு சுருட்டிய இந்திய அணி, 21.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அட்டகாசமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் வங்கதேசத்துடன் இந்தியா மோதவுள்ளது. சார்ஜாவில் ஜூனியர் ஆசிய கோப்பைக்காக, 19 வயதுக்கு உட்பட்டோர் பங்குபெறும் ஒரு நாள் போட்டிகள் நடந்து வந்தன.

லீக் போட்டிகள் முடிந்ததை அடுத்து நேற்று இந்தியா – இலங்கை அணிகள் இடையே அரை இறுதிப் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய இலங்கையின் துல்னித் சிகேரா 2, புலிந்து பெரேரா 6 ரன் எடுத்து மோசமாக அவுட்டாகினர். ஷருஜன் சண்முகநாதன் 42, லக்வின் அபயசிங்கே 68 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை அதலபாதாளத்தில் வீழாமல் காப்பாற்றினர். இருப்பினும் மற்ற வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இதனால் 46.2 ஒவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் சேத்தன் சர்மா 3, கிரண் சோர்மலே 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய வீரர்கள் களம் புகுந்தனர். துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 34, வைபவ் சூர்யவன்ஷி 67 ரன் குவித்து சிறப்பான துவக்கம் தந்தனர்.

ஆண்ட்ரே சித்தார்த் 22 எடுத்து அவுட்டானார். இறுதியில், 21.4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன், வைபவ் சூர்யவன்ஷி. இறுதிப் போட்டி, துபாயில் நாளை இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

* கோடி ரூபாய்க்கு ஒர்த்து… நிரூபித்த ஐபிஎல் சிறுவன்
இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷியை (13), ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரியளவில் ஆச்சரிய அலைகளை உண்டாக்கியது.
ஆனால், அதற்கு தகுதியானவர் என்பதை தான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் சூர்யவன்ஷி நிரூபித்து வருகிறார்.

நேற்றைய போட்டியில் 36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 67 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வலிமையான அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தார். இதற்கு முன்னதாக, 4ம் தேதி நடந்த கால் இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதியபோதும், சூர்யவன்ஷி 46 பந்துகளில் 76 ரன் குவித்தார். இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

* பாக்.கை பதம் பார்த்து வங்கதேசம் அபார வெற்றி
ஜூனியர் ஆசிய கோப்பைக்காக துபாயில் நேற்று நடந்த மற்றொரு அரை இறுதி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தை துவக்கிய பாக். வீரர்கள் உஸ்மான் கான், ஷாஸெப் கான் பூஜ்யத்தில் அடுத்தடுத்து வீழ்ந்து அதிர்ச்சி தந்தனர்.

முகம்மது ரியாசுல்லா (28 ரன்), பர்ஹான் யூசப் (32 ரன்) தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. இறுதியில் 37 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளை இழந்த பாக். 116 ரன்னுக்கு சுருண்டது. பின், 117 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது. அந்த அணியின் அஸிசுல் ஹகிம் அவுட்டாகாமல் 61 ரன் எடுத்தார்.

The post ஜூனியர் ஆசிய கோப்பை அரை இறுதியில் சுருண்டது இலங்கை நிமிர்ந்தது இந்தியா: 7 விக்கெட் வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Read Entire Article