'ஜீவா' திரைப்படம் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை.. சம்பளம், வாழ்க்கை குறித்து பேசிய வருண் சக்ரவர்த்தி

5 days ago 3

சென்னை,

அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

முன்னதாக கடந்த 2021-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அதில் மோசமாக செயல்பட்டார். 3 போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வில்க்கெட் கூட கைப்பற்றாததால் பெரும் விமர்சனத்தை சந்தித்தார். அதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி நீண்ட வருடங்கள் கழித்து கோப்பை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் அசத்தியதால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட வருண் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் தடம் பதிப்பதற்கு முன் தான் சந்தித்த வாழ்க்கை பிரச்சனைகள் மற்றும் வாங்கிய சம்பளம் குறித்த பல்வேறு தகவல்களை இந்திய முன்னாள் வீரரான அஸ்வினின் யூடியூப் பக்கத்தில் வருண் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் கல்லூரி படிப்பை முடித்த உடனேயே, ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள்பணிபுரிந்தேன். அதில், என்னுடைய ஆரம்ப ஊதியம் மாதத்திற்கு ரூ.14,000. அந்த நிறுவனத்தில் இருந்து நான் வெளியே வரும்போது என்னுடைய சம்பளம் ரூ.18,000.

நான் அந்த வேலையை விட்டுச் சென்ற பிறகு, சிறிது காலத்திற்கு, இசை மீதான எனது அன்பை மீண்டும் தூண்டுவதற்காக கிதார் வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால், நாம் ஏதாவது கலையைத் தொடர விரும்பினால், அது நமக்குள்ளிருந்து வர வேண்டும் என்பதை 6-8 மாதங்களுக்குப் பிறகுதான் அதை உணர்ந்தேன், பின்னர் அதை நிறுத்தி விட்டேன்.

பின்னர் நான் சொந்தமான ஒரு கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினேன். வர்தா புயல் வரும் வரை அது நன்றாகவே நடந்தது. ஆனால் புயலுக்கு பின் எல்லாவற்றையும் இழந்தேன். அதனால் அதுவும் முடிந்தது. அப்போது எனக்கு 24-25 வயது இருக்கும்.

பின்னர் சினிமா மீது ஆசை வந்தது. நான் உதவி இயக்குநராக வேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கு சென்றேன். ஆனால் அது பலனளிக்கவில்லை. அப்போது துணை இயக்குனர் ஒருவர், உனக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமா என்று கேட்டார். நான் டென்னிஸ் பாலில் விளையாடி இருக்கின்றேன் என்று கூறினேன்.

இதனையடுத்து என்னை கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்த 'ஜீவா' படத்தில் ஆக சேர்த்தார்கள். அப்போது ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளமாக கிடைத்தது. அந்த சமயத்தில் அது எனக்கு உதவிகரமாக இருந்தது. மொத்தம் அந்த 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

உரையாடலின்போது, அஸ்வின் குறுக்கிட்டு வருண் சக்ரவர்த்தியிடம் ஒரு கிரிக்கெட் வீரராக அவரது தற்போதைய தினசரி வருமாணம் எவ்வளவு கிடைக்கிறது? என்று கேட்டார். அதற்கு "நான் அப்போது வாங்கிய சம்பளத்தை விட 42 மடங்கு (தோராயமாக ரூ.25,000) அதிகமாக கிடைக்கிறது" என்று கூறினார்.

வாழ்வில் இவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள வருண் சக்ரவர்த்தி தற்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். 

Read Entire Article