சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி என பல்வேறு வானிலை மாற்றங்கள் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு இருள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, பரங்கிமலை, அசோக் நகர், அண்ணா நகர், செனாய் நகர், கீழ்பாக்கம், வேப்பேரி, மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், நெற்குன்றம், கலைஞர் நகர், ஈக்காட்டுத்தாங்கல், மாதவரம், ஆவடி, புழல், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை பெய்து வருகிறது. சென்னையில் சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டங்களில் காலை முதல் திடீரென கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post ஜில்லுனு ஆன சென்னை.. சுறைக்காற்றுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி..!! appeared first on Dinakaran.