ஜிஎஸ்டி, நிலையற்ற நூல் விலையால் ரூ.1000 கோடி ஜவுளி தேக்கம்: உற்பத்தியாளர்கள் வேதனை

1 month ago 11

சேலம்: ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி உயர்வால் ஜவுளிகள் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலையற்ற நூல் விலையால் ரூ.1000 கோடிக்கு ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014 முதல் பஞ்சு விலை ஏறாமல் இருந்ததால் ஜவுளி உற்பத்தி நல்லமுறையில் இருந்தது. அதற்கு ஏற்ப ஏற்றுமதியும் இருந்தது.

கடந்த 2021 செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்திற்கு விற்றது. தொடர்ந்து விளைச்சல் குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக டவல்கள் உற்பத்தி அதிகரித்து விற்பனை இல்லாததால் உற்பத்தியாளர்களிடம் பல கோடி மதிப்பில் தேக்கமடைந்து கிடக்கிறது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேட்டி, சேலை, சாமி வேட்டி, ஜரிகை வேட்டி, ஜரிகை சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக எப்போதும் இல்லாத அளவில் ஜவுளி தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் காடா ரகம் அதிகளவில் உற்பத்தியாகி விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன. விசைத்தறிகளை பழைய இரும்பு கடைகளில் எடை போட்டு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் விசைத்தறி கூடங்களை மூடிவிட்டனர். பல ஊர்களில் விசைத்தறி கூடங்கள் வாடகைக்கு விடப்படும் என்று போர்டுகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியால் ஜவுளிகளின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜவுளிச்சந்தை உள்ள அமெரிக்காவுக்கு பல நாடுகளில் இருந்து ஜவுளி அனுப்பப்படுகிறது. இதில் சீனா முதலிடம் பெற்றுள்ளது. சிறிய நாடான வங்காள தேசம் அடுத்த இடத்தில் உள்ளது. நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது. பருத்தி நூல் அடிக்கடி விலை உயர்வதும், பிறகு குறைவதும் நெசவு தொழிலுக்கு நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. எனவே, நூல் விலையை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதை கண்காணிக்க அரசு குழு அமைக்க வேண்டும். ஜவுளி ஏற்றுமதிக்கு என்று மத்தியில் ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில்காடா துணிகளும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் டவல் மற்றும் சேலைகளும், கரூரில் பெட்ஷீட், ஜமுக்காளமும் பல கோடி மதிப்பில் தேக்கமடைந்துள்ளது. ஜவுளிகள் தேக்கம் காரணமாக பல ஊர்களில் நெசவாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் ரூ.1000 கோடிக்கு ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்களின் நலன்கருதி தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு 2 டவல்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு சிங்காரம் கூறினார்.

* உலகின் மிகப்பெரிய ஜவுளிச்சந்தை உள்ள அமெரிக்காவுக்கு பல நாடுகளில் இருந்து ஜவுளி அனுப்பப்படுகிறது. இதில் சீனா முதலிடம் பெற்றுள்ளது. சிறிய நாடான வங்காள தேசம் அடுத்த இடத்தில் உள்ளது. நம்நாடு கடைசி இடத்தில் உள்ளது.

The post ஜிஎஸ்டி, நிலையற்ற நூல் விலையால் ரூ.1000 கோடி ஜவுளி தேக்கம்: உற்பத்தியாளர்கள் வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article