ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்: ராகுல், கார்கே, மம்தா, உதயநிதி ஸ்டாலின், அகிலேஷ், கெஜ்ரிவால் பங்கேற்பு

1 month ago 3

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்தவிழாவில் கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, உதயநிதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். ஜார்க்கண்ட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களைக் கைப்பற்றியது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட்டில் முதல்முறையாக ஒரு அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்து மீண்டும் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்தியா கூட்டணியின் வெற்றியை அடுத்து, ஹேமந்த் சோரன் கடந்த 24ம் தேதி ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ராஞ்சியில் உள்ள மொராபாதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஜார்க்கண்ட்டின் 14வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பழங்குடியினர் குழுக்கள், பாரம்பரிய உடைகள் அணிந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், மைதானத்தில் ‘தோல் மற்றும் நகரா’ பாடலுக்கு நடனமாடினர். ஹேமந்த் சோரன் அரசு பதவியேற்பதை முன்னிட்டு ராஞ்சி நகரில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

ஒற்றுமையே மிகப்பெரிய ஆயுதம்
ஜார்க்கண்ட் முதல்வராக பதவி ஏற்கும் முன்பு தனது எக்ஸ் பதிவில் ஹேமந்த் சோரன் கூறியிருப்பதாவது: எங்களை அமைதிப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம், புரட்சி சத்தமாக வெடிக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நமது ஒற்றுமையே நமது மிகப்பெரிய ஆயுதம். நாம் பிளவுபடவும் முடியாது, அமைதியாக இருக்கவும் முடியாது. அவர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளும் போதெல்லாம் நாம் முன்னேறுவோம். அவர்கள் நம்மை மவுனமாக்க முயலும் போதெல்லாம் நமது கிளர்ச்சி மற்றும் புரட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. நாங்கள் ஜார்க்கண்டியர்கள், ஜார்க்கண்டியர்கள் தலைவணங்க மாட்டார்கள். எங்கள் போராட்டம் உறுதியானது, இடைவிடாதது. போராட்டம் தொடர்கிறது.கடைசி மூச்சு வரை தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்: ராகுல், கார்கே, மம்தா, உதயநிதி ஸ்டாலின், அகிலேஷ், கெஜ்ரிவால் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article