சென்னை: ஜாமீன் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீன் கிடைத்தும் பிணை செலுத்த முடியாமல் 800க்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ஜாமீன் அளித்த பின்னரும் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் 104 பேர் சிறையிலேயே உள்ளனர் என்று கூறி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அதிகபட்சமாக கோவை மத்திய சிறையில் 27 பேர் உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக 32 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
புதுச்சேரியில் 14 பேர் சிறையில் உள்ளதாக அம்மாநில அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் தற்போது சிறையில் உள்ளவர்களை அவர்களுக்கான நிபந்தனைகளை தளர்த்தி விடுவிக்க தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்குவதில் எந்த பயனும் இல்லை. எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றங்கள் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The post ஜாமீன் நிபந்தனைகளை எளிமையாக்க வேண்டும்: விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.