
சனிப்பெயர்ச்சி என்றாலே அவரது அசுப பார்வையால் ஏற்படும் சங்கடங்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆத்திரத்தில் யாரையாவது திட்டவேண்டுமானாலும் சனியின் பெயரைச் சொல்லியே திட்டுவார்கள். இப்படி சனியை வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி பகவானை போல கொடுப்பாரும் இல்லை, சனி பகவானைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது சான்றோர் வாக்கு. அந்த வகையில் ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான்.
ஜாதகத்தில் சனி பகவானின் இருப்பிடம், அவர் எந்த ராசியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து பலன் அமையும். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்ட வைப்பார்.
ஜாதகத்தில் 3,6,10,11-ம் இடத்தில் சனி பகவான் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் ஈடுபாடு, உத்யோகம், வருவாய் பெரியோர் ஆதரவு தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும். 8-ம் இடத்து சனி, தொல்லைகள் அளித்தாலும் ஆயுளை அதிகரிக்கச்செய்வார்.
ரேகை சாஸ்திரத்தில் நடுவிரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில் அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால் ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும்.
12-ல் சனி இருந்தால் சிலருக்கு சில நன்மைகளும், சிலருக்கு சில கஷ்டங்களும் ஏற்படலாம். சிலருக்கு திருமண வாழ்க்கை தாமதம் ஆகலாம். ஊதாரித்தனம், வந்த வருமானம் தீய வழியில் செலவிடுதல் போன்றவை நிகழும்.
பெருவிரலை அடுத்த சுக்கிரமேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனி பாடாய்படுத்தப் போவதற்கான அறிகுறி என உறுதியாக நம்பலாம்.
4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத பிரச்சினையில் சிக்க நேரிடலாம்.
இது பொதுவான பலனாக இருந்தாலும், சனி பகவானின் நிலையுடன், அவருடன் இருக்கும் மற்ற கிரகங்கள், மற்றும் ஜாதகத்தில் உள்ள பிற கிரகங்களின் சேர்க்கை ஆகியவற்றை பொறுத்து பலன்கள் மாறுபடும்.