ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே கோபாலபுரம் ஊராட்சியில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடு முரடாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரம் யாதவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த காலனி சாலை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதால், தற்போது இச்சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடு முரடாக காணப்படுகிறது. இதனால், சேதமடைந்து காணப்படும் சாலையில் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, இக்காலனி சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுவதால், சோளிங்கர் மற்றும் எரும்பி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காணப்படும் சாலையை அகற்றிவிட்டு, புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.