சண்டிகர்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜ ஆட்சி அமைக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாகவும் (செப். 18, 25, அக்.1), அரியானாவில் ஒரே கட்டமாகவும் (அக்.5) சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. காஷ்மீரில் கடந்த 2019ல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டப்பேரவை நடந்துள்ளது. மேலும், அங்கு 10 ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டதால் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அரியானாவில் கடந்த 10 ஆண்டாக பாஜ ஆட்சி நீடிக்கிறது. இம்முறை காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று அரியானாவில் ஆட்சியை கைப்பற்றும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. இதனால், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபிஐ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜ, மக்கள் ஜனநாயக கட்சிகள் (பிடிபி) தனித்து களமிறங்கின. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றன. ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. தேசிய மாநாட்டு கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டு 42 இடங்களிலும், 39 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஒரே தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், அத்தொகுதியை வசமாக்கியது. ஜேகேஎன்பிபிஐ கட்சி 4 தொகுதியில் போட்டியிட்டு நான்கிலும் தோற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இவர் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியானது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 29 இடங்களை கைப்பற்றியது. 81 தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜவின் மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா, மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, முன்னாள் துணை முதல்வரான காங்கிரசின் தாரா சந்த் உள்ளிட்டோர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல, 90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநிலத்தில் பாஜ, காங்கிரஸ் நேருக்கு நேர் மோதின. ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் இந்திய தேசிய லோக் தளமும், கன்சிராம் அசாத் சமாஜ் கட்சியுடன் ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜேஜேபி) கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், யாருமே எதிர்பாராத முடிவு வெளியானது. ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும், சில மணி நேரத்தில் பாஜ முன்னிலை பெறத் தொடங்கியது. பிற்பகலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான 46 சீட்களில் பாஜ முன்னிலை பெற்றது.
இறுதியில் பாஜ 48 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றியுடன் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஷி சம்ப்லா-கிலோலி தொகுதியிலும் வெற்றி பெற்றனர். கடந்த 2019ல் 40 தொகுதியில் வென்ற பாஜ, கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த நிலையில் இம்முறை பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நயாப் சிங் சைனி 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2019ல் 31 தொகுதியில் காங்கிரஸ் வென்ற நிலையில் இம்முறை கூடுதலாக 6 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) 2 தொகுதியிலும், சுயேச்சைகள் 3 தொகுதியிலும் வெற்றி பெற்றன. காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் 90 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட ஆம் ஆத்மி அனைத்திலும் தோல்வி அடைந்தது. மக்களவை தேர்தலுக்குப் பிறகு நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் என்பதாலும், அடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதாலும் அரியானாவில் கிடைத்த வெற்றியை பாஜ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. அதே சமயம் அரியானா வாக்கு எண்ணிக்கையில் பல தில்லுமுல்லு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
The post ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங். கூட்டணி ஆட்சி அமைக்கிறது: அரியானாவில் 3வது முறையாக பாஜ வெற்றி appeared first on Dinakaran.