ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது ஜிப்லைனில் உற்சாகமாக பயணித்து கொண்டிருந்தவர் செல்போனில் பதிவான காட்சிகள் காண்போரை கலங்க செய்வதாக உள்ளது. பெகல்காம் அருகே மினி சுவிஸர்லாந்து எனப்படும் பைசரம் புல்வெளியில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் நேபாளத்தை சேர்ந்தவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பசுமை புல்வெளியில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்தும், குழந்தைகளோடு உற்சாகத்துடன் விளையாடி கொண்டிருந்த தருணத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள் கண்ணில் தென்பட்ட ஆண்களை எல்லாம் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாக்கினர்.
தாக்குதலுக்கு பின்னான காணொளிகளும் பசுமை புல்வெளி பரப்பில் உடல்கள் ஆங்காங்கே கிடந்த காணொளிகளும் வெளியான நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட தருணத்தை காட்டும் காணொளி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த ரிஷிப் பட் என்பவர் ஜிப்லைனில் அமர்ந்து பயணித்த போது கீழே புல்வெளியில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடும் ஒளியும் வீடியோவில் பதிவாகி உள்ளது. கீழே இருக்கும் மக்கள் தோட்டா சத்தம் கேட்டு ஓடுவதும் தோட்டா மேலே பட்டு ஒருவர் சரிந்து விழும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.
ஜிப்லைனில் பாதி தொலைவு கடந்த போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உணர்ந்ததாக கூறியுள்ள ரிஷிபண்ட் மறுமுனையில் கண்முன்னே துப்பாக்கி சூட்டுக்கு இறப்பதை கண்டு அலறிய மனைவி குழந்தையோடு அங்கிருந்த பள்ளத்தில் மறைந்து கொண்டிருந்ததாகவும் பின்னர் தோட்டா சத்தம் கேட்காதபோது நுழைவுவாயில் ஓடி சென்று குதிரை ஓட்டி ஒருவர் உதவியால் அங்கிருந்து தப்பியதாக கூறியுள்ளார். புல்வெளி பரப்பை கடப்பதற்குள் 15க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்படுவதை நேரில் கண்டதாக கூறியுள்ள அவர் ஜிப்லைன் ஆப்ரேட்டார் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜிப்லைன் ஆப்ரேட் செய்தவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
The post ஜம்மு காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் புதிய காணொலி: ஜிப்லைனில் பயணித்தவர் எடுத்த வீடியோ பரவல் appeared first on Dinakaran.