
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், மல்ஹார் அருகே கடந்த 5-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வருண் சிங் (வயது 15), அவரது மாமா யோகேஷ் சிங் (வயது 32), தாய் மாமா தர்ஷன் சிங் (வயது 40) ஆகிய 3 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் இல்லத் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் அவர்களை காணவில்லை. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். போலீசாருடன் ராணுவ வீரர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டிரோன்கள் மூலம் கண்காணித்தபோது ஊரைவிட்டு வெகு தொலைவில் உள்ள மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சி அருகே உள்ள கால்வாயில் 3 பேரின் உடல்களும் கிடந்தது கண்டறியப்பட்டது. நேற்று மாலை உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, அவர்களின் சாவுக்கான காரணம் தெரியவரும்.
இறந்தவர்களின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை. எனினும், இதன் பின்னணியில் பயங்கரவாத தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பானி தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. ராமேஸ்வர் சிங் சென்றார். இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற அவருடன், போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் தலையிட்டு, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
மூன்று பேரின் மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தி உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநில நிர்வாகமும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.