*பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பெரம்பலூர் : தந்தை கடன் வாங்கிய தொகை தள்ளுபடியான போதும், கடனை கட்டச் சொல்லி தன்னிடம் வங்கி நெருக்கடி கொடுப்பதாகவும், இழந்த பணத்தையும், ஜப்தி செய்த நிலங்களையும் மீட்டுத் தரக் கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, மகளோடு விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் கள்ளை கிராமத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் பெரியசாமி(52). இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவி கல்பனா(31), மகள் திவ்யா (8) ஆகியோருடன் தனது டிராக்டருக்காக வாங்கி வைத்திருந்த, 5 லிட்டர் டீசல் கேனை கையோடு கொண்டு வந்திருந்தார்.
கலெக்டர் அலுவலக போர்ட்டிக்கோ முன்பு வந்தநிலையில் பெரியசாமி கையில் வைத்திருந்த டீசல்கேனை மனைவி கல்பனா வாங்கி மூடியைத் திறந்து தனது தலையிலும் தனது மகள் தலையிலும் ஊற்றினார். இதனைப் பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்புப் போலீசார் தீக்குளிக்க வந்திருப்பதை அறிந்து ஓடிச் சென்று தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பெரம்பலூர் டவுன் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மனைவி, மகளை அழைத்து வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு, குடும்பத்தோடு தீக்குளிக்க முற்பட்ட பெரிய சாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
டீசலை உடலில் ஊற்றியதால் பெரிய சாமியின் மனைவி, மகள் இருவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரியசாமி தெரிவிக்கையில், எனது தந்தை குமாரசாமி கடந்த 2007ஆம் ஆண்டு குன்னம் தாலுகா, மேலமாத்தூர் யூனியன் வங்கியில் வாங்கியா விவசாயக் கடனில் ரூ.4,85,000க்கு டிராக்டர் வாங்கியுள்ளார். 2008ஆம் ஆண்டில் அந்தக் கடன் மத்திய அரசால் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.5,53,466 வட்டியுடன் தள்ளுபடியாகி உள்ளதாம்.
ஆனாலும் வங்கி சார்பாக தொடர்ந்து ரூ.5,30,000 பிடித்தம் செய்ததாகவும், மேற்படி பிடித்தம் செய்த பணத்தையும் ஜப்தி செய்த நிலத்தையும் மீட்டுத் தர வேண்டும் எனவும், நான் டிராக்டர் கடன் வங்கியதாக பணகட்டச் சொல்லி வங்கி ஊழியர்கள் தொந்தரவு செய்வதால் எனக்கு கோர்ட்டு வழக்கு செலவுக்கே இதுவரை ரூ.30 லட்சம் வரை செலவாகி விட்டது.
வங்கியின் கெடுபிடிகளால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே நான் செலவுசெய்த தொகை ரூ.30 லட்சத்தை வங்கி வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.இச்சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஜப்தி செய்த நிலங்களை மீட்டுதரக் கோரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் appeared first on Dinakaran.