ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை பிரயாக்ராஜ் செல்கிறார்

1 month ago 8

பிரயாக்ராஜ்,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி பவுர்ணமி அன்று தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஒட்டகம், குதிரைகளில் ஊர்வலகமாக வந்து சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீராடி வருகின்றனர். இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்தவண்ணம் உள்ளனர்.

கடந்த 5-ந் தேதி கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். அதற்கு முன்னதாக பூட்டான் மன்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் புனித நீராடினர். அதேபோல நடிகர் அனுபம் கெர், நடிகைகள் ஹேமமாலினி, ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சிதா ஷெட்டி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.

இந்நிலையில், கும்பமேளாவுக்கு வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 41 கோடியை கடந்துள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மாகி பவுர்ணமி (12-ந் தேதி), மகா சிவராத்திரி (26-ந் தேதி) ஆகிய 2 சிறப்பு நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், பிரயாக்ராஜ் நகருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வர இருக்கிறார். மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராட உள்ளார் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வருகையையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read Entire Article