சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- குரூப் 1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்த 57 வேலை நாட்களில், விரைவாக கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. 2023 ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு -1 (தொகுதி 1 பணிகள்) உடன் ஒப்பிடும் போது, தேர்வு முடிவுகள் 4 மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- குரூப் 1பி பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் தேர்வு முடிந்த 48 வேலை நாட்களில், விரைவாக கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)-ல் 49 பாடத்தாள்களுக்கான தேர்வுகள், கணினி வழித்தேர்வு மூலம் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் 77 வேலைநாட்களில் விரைவாக கடந்த பிப்ரவரி 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2024ம் ஆண்டு தெரிவுப்பணிகள் நிறைவுற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகள். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு, ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள் தேர்வு மற்றும் செயல் அலுவலர் நிலை 4 பணிக்கான தேர்வு ஆகியவற்றிற்கான தேர்வர்களுடைய விடைத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வின் போது ஒவ்வொரு பதவிக்கான காலிப்பணியிடங்களின் விவரங்களை தேர்வர்கள் நேரடியாக தேர்வாணையத்தின் யூடியூப் சேனல் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுத்துறைகளின் தேவைக்கேற்பவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளில் 2025ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 57 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
The post ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதத்தில் 7557 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல் appeared first on Dinakaran.