ஜனநாயக பேரவை

2 weeks ago 4

நடப்பாண்டின் நீண்ட சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்பட்ட நிலையே இருந்தது. ஆனால், 36 நாட்கள் நடந்த இக்கூட்டத்தில், ஆளுங்கட்சியினர் மட்டுமல்ல… எதிர்க்கட்சியினர், கூட்டணி கட்சியினர் உட்பட அனைவருக்குமே, தங்களது கருத்தைச் சொல்ல சிறப்பான வாய்ப்பு அளித்தது பாராட்டிற்குரியது. மொத்தம் 55 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதமும் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 3 துறைகள் வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விவாதங்களில் சில நேரம் அனல் பறந்தது. சில நேரம் அற்புதமான புள்ளி விபரங்களுடன் விவாதிக்கப்பட்டன. நகைச்சுவையாக பகிரப்பட்ட கருத்துகளும் பேரவையை இயல்பாக கடத்திச் சென்றது. பேரவை நடந்து கொண்டிருக்கும்போதே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது கவனம் காட்டாத ஆளுநருக்கு, சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்த தீர்ப்பும் வெளியானது. 10 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது. அதில் குறிப்பாக, முதல்வரே பல்கலைக்கழகத்தின் வேந்தராக செயல்படுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது, மாநில அரசின் அதிகாரத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.

மேலும், பேரவையில் ஒன்றிய பாஜ அரசு கொண்டு வக்பு திருத்த சட்ட மசோதாவை, வாபஸ் பெற வேண்டுமென தனித்தீர்மானத்தை நிறைவேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்கு சிறுபான்மையினர் உட்பட தமிழக மக்கள் பெரும்பாலானோர் வரவேற்பு அளித்துள்ளனர். இதுதொடர்பாக பிடிபி கட்சி தலைவரும், மாஜி முதல்வருமான மெஹபூபா முப்தி கூறும்போது, ‘‘வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழக அரசிடமிருந்து, தேசிய மாநாட்டுக் கட்சி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று பாராட்டியுள்ளார்.

மேலும், கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு தண்டனை என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் கடன் பெற்றவர்களை மிரட்டி, உருட்டி பணிய வைப்பது இனி நடக்காது. கடன் பிரச்னையால் தற்கொலையை தேர்ந்தெடுக்கும் தவறான முடிவுகளுக்கும் முடிவு கட்டப்படும் என்கிற வகையில் இம்மசோதா அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் 18 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், மாநில நிதி நிலைமையை கருதாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளார். மாநில காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கும், உள்ளாட்சி துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வாய்ப்பும் வழங்கும் மசோதா என மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுடன் கூட்டத்தொடர் நிறைவாகவே நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது அர்த்தம் பொதித்தது.

தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது. அனைத்து துறைகளையும் முன்னேற்றி, தலைநிமிரச் செய்துள்ளோம். எங்கள் சாதனை மிகுந்த திராவிட மாடல் அரசின் பகுதி-1 தான் இது. 2026ல் 2.0 வெர்ஷன் தொடங்கும். அதில் இன்னும் சாதனைகளை படைப்போம் என கூறியுள்ளார். இன்னும் 6 நாட்களில் 4வது ஆண்டை தமிழக அரசு வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. 2026லும் திராவிட மாடல் அரசின் 2.0 வெர்ஷன் அமையுமென்பதற்கு, கடந்த 4 ஆண்டுகள் நிகழ்த்திய சாதனைகளே சாட்சியாக விளங்கும்.

The post ஜனநாயக பேரவை appeared first on Dinakaran.

Read Entire Article