சோழவந்தான்: சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே புதிதாக படித்துறை அமைத்து கொடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் முக்கிய கோவில் நகரங்களில் சோழவந்தானும் ஒன்றாகும். வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இவ்வூர் விவசாயத்திற்கு மட்டுமன்றி ஆன்மிகத்திற்கும் உரியதாகவும் உள்ளது. இங்கு சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் கள்ளழகர் உற்சவம், வைகாசி மாதம் நடைபெறும் ஜெனகை மாரியம்மன் கோயில் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வைகை ஆற்றைச் சார்ந்தே நடைபெறும். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு சோழவந்தானிலிருந்து தென்கரையை இணைத்த வைகையாற்று தரைப்பாலத்தை அகற்றி, பெரிய தூண்களுடன் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இதற்கு மாற்றுப் பாதையாக சனீஸ்வரன் கோவில் எதிரே வைகையாற்று கரையோரம் இருந்த படித்துறைகளின் மேல் மண் நிரப்பி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து நடைபெற்றது. பணிகள் முடித்து புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கிய பின் அப்போதைய அதிகாரிகள் வாக்குறுதி அளித்த படி படித்துறையை சீரமைக்கவில்லை. பின்னர், படித்துறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். நாளடைவில் யாரும் அதை கண்டுகொள்ளாததால் படித்துறைகள் இருந்த சுவடே இல்லாமல் காணாமல் போய் விட்டது. இதை மீண்டும் சீரமைத்து தருமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘சனீஸ்வரன் கோயில் எதிரே வைகை கரையோரம் இரண்டு படித்துறைகள் இருந்தன. ஒரு புறம் ஆண்களும், மறுபுறம் பெண்களும் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தினர். இதற்கு சற்று தொலைவில் வட பகுதியில் ஆற்றுக்குச் செல்ல அகலமான இறங்கு பாதை இருந்தது. இதனால் இரு புறமும் விழாக் காலங்களில் பக்தர்கள் நெரிசலின்றி சென்று வந்தனர். ஆனால் தற்போது படித்துறை இருந்த பாதை பயனற்ற நிலையில் உள்ளது. இருப்பினும் வட பகுதியில் உள்ள பாதை மட்டும் தற்போதும் சிமென்ட் சாலையாக பயன்பாட்டில் உள்ளது. இதன் வழியாக தான் ஜெனகை மாரியம்மன் திருவிழாவின் பால் குடம், அக்னி சட்டி, தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா ஆகியவற்றுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்த ஒரே வழியில் ஆற்றுக்கு உள்ளே செல்பவர்களும், வெளியில் வருபவர்களும் செல்லும் போது கடுமையான நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் அவதியுறும் நிலை ஆண்டு தோறும் தொடர்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சனீஸ்வரன் கோவில் எதிரில் படித்துறைகள் இருந்த இடத்தை சீரமைத்து படித்துறை அமைக்க வேண்டும். இதனால் காணாமல் போன படித்துறை மீண்டும் கிடைப்பதுடன் விழாக்காலங்களில் பக்தர்களுக்கு பயனாகவும்,பாதுகாப்பாகவும் இருக்கும்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
மாற்றுப் பாதையாக சனீஸ்வரன் கோவில் எதிரே வைகையாற்று கரையோரம் இருந்த படித்துறைகளின் மேல் மண் நிரப்பி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து நடைபெற்றது.
The post சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே புதிதாக படித்துறை அமைத்து கொடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.