சோழர் காலத்திலிருந்தே நடந்திருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

3 weeks ago 5

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே நடந்திருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த பகுதியில் 20 வருடங்களுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். அப்போது குறுகிட்ட நீதிபதிகள், 20 ஆண்டுகள் இல்லை, சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும். 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112 ஏக்கராக சுருங்கிவிட்டது என்றனர்.

அப்போது, அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன், உரிய பட்டாவோடு மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று கோரினார். அப்போது நீதிபதிகள், கடும் மழை காலத்தில் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்களையும் இணைக்க உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சோழர் காலத்திலிருந்தே நடந்திருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article